விஜய் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா பயணம் திடீர் ரத்து... என்ன காரணம்?!

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு மேற்கொள்ளவிருந்த ஆன்மிகப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஜய் வருகை தரும் பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டுக்கடங்காத அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயணத்தை ரத்து செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு விஜய் சென்று வருகிறார். ஏற்கனவே திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் சீரடி சாய்பாபா கோயிலில் அவர் வழிபாடு நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், எக்சிட் போல் முடிவுகள் தவெக-வுக்குச் சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன. இதனால் உற்சாகத்தில் உள்ள ரசிகர்கள் விஜய்யைக் காண அதிக அளவில் திரள வாய்ப்புள்ளதால், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுடனான ஆலோசனையை ஏற்கனவே முடித்துள்ள விஜய், தற்போது சென்னையில் இருந்தபடி தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் மற்றும் மே 4-ஆம் தேதி பனையூரில் நடைபெற உள்ள முக்கியக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நேற்று மாலை வரை இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை வெளியாகியுள்ள இந்த ரத்து அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.