விஜய் Vs உதயநிதி... எகிறும் எதிர்பார்ப்பு... இன்று கூடுகிறது 17வது சட்டப்பேரவை!
தமிழகத்தில் விஜய் Vs உதயநிதி என்கிற காம்பினேஷன் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இளையவர்கள் சட்டசபையில் விவாதிப்பதும், ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவதும், நல்ல திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று முறைப்படி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 17-வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 9:30 மணிக்குக் கூடுவதால், புதிய எம்எல்ஏக்களைப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராகச் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், விதிமுறைகளின்படி நேற்றே திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்திருந்தார்.
இன்று கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் அனைத்துப் புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிப் பிரமாணத்தை எடுத்துக்கொள்ள உள்ளனர். தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ள தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் முழுவதும் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்தவுடன், நாளை தமிழக சட்டமன்றத்திற்கான புதிய சபாநாயகர் முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது பெரும்பான்மையை அவையில் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து முதன்முறையாக அரியணை ஏறியுள்ள தவெக, தனது முதல் சட்டசபைக் கூட்டத்தொடரை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளது.