"மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் விஜய்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்!

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உள்கட்சி முடிவுகளைக் கடுமையாகச் சாடிப் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெகவை நோக்கித் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த மெகா எழுச்சி குறித்தும் விவரித்தார்.

மாமல்லபுரத்தில் சுமார் 15,000 தொண்டர்கள் திரண்டிருந்த பிரம்மாண்ட மேடையில் உரையாற்றிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக அரசியலின் தற்போதைய போக்கைக் குறிப்பிட்டுப் பேசினார். "தமிழகத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த பழைய அரசியல் பாணிகளை உடைத்து, ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் முதலமைச்சர் விஜய். இன்று தமிழக மக்கள் ஒரு புதிய, தூய்மையான நிர்வாகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்."

"அரசியல் மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு தலைமுறை மாற்றம். இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளையும், அடித்தட்டு மக்களின் தேவைகளையும் உணர்ந்து செயல்படும் ஒரு தலைவராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்."

எடப்பாடி பழனிசாமியின் தவறான உள்கட்சி மற்றும் கூட்டணி வியூகங்களால் கட்சி நிலைகுலைந்து போயுள்ளதை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார். "அதிமுக பொதுச்செயலாளரின் தவறான மற்றும் சுயநலமான முடிவுகளால் தான் அந்த இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மக்கள் தவெகவிற்கு வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், திமுகவின் ஆதரவோடு குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர இபிஎஸ் முயன்ற சதிதான் எங்களைப் போன்ற மூத்த தலைவர்களை இந்த முடிவை நோக்கி நகர்த்தியது. எங்கள் கையில் இருந்த எம்.எல்.ஏ பதவிகளை விட, தமிழகத்தின் வருங்காலத்தைக் காக்கும் தலைவர் விஜய்யின் கரங்களை வலுப்படுத்துவதே எங்களுக்கு முக்கியம்."

மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், தவெக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த ஆவேச உரை தவெக மற்றும் மாற்றுக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.