விஜய் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு நேரில் சென்று நன்றி!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இதனிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியும் தவெக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, விஜய்யின் பலம் தற்போது 117-ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை நெருங்கியுள்ள நிலையில், ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய், முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆளுநருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு விஜய் நேரில் சென்றார். அங்கு அக்கட்சிகளின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த அவர், அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கித் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இக்கட்டான இந்தச் சூழலில் தவெக-வுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இடதுசாரி கட்சிகளின் முடிவை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

தமிழகத்தில் முதன்முறையாகத் திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய ஆட்சி அமைவதற்கு இன்னும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் மீதமுள்ள ஒரு இடத்தைப் பெற மற்ற சிறிய கட்சிகளுடன் தவெக தரப்பு தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. விஜய்யின் இந்தத் திடீர் விசிட் மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் பதவியேற்பது எந்நேரமும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.