மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்... மு.க.ஸ்டாலின் பாணியில் அதே தேதியைத் தேர்வு செய்த விஜய்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான தேதியைக் குறித்துவிட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அதே மே மாதம் 7-ஆம் தேதியை, விஜய் தனது பதவியேற்பு விழாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 34.92 சதவீத வாக்குகளைப் பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ள விஜய், நாளை காலை தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர உள்ளார்.
இந்தத் தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே அமோக வெற்றி பெற்றுள்ளார். கட்சித் தொடங்கிய முதல் தேர்தலிலேயே இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளதோடு, 108 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாளை (மே 6) காலை ஆளுநரைச் சந்தித்த பிறகு, பதவியேற்பு விழாவிற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறலாம் அல்லது ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்படலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விஜய்யுடன் சேர்ந்து சில முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளது. இதற்கான உத்தேச அமைச்சரவை பட்டியலை விஜய் ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகத் தெரிகிறது. முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து, மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதே தேதியில் தானும் பொறுப்பேற்க விஜய் முடிவெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.