"அடுத்த 20 வருசத்துக்கும் விஜய் தான் முதலமைச்சர்" - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு!
"தமிழகத்தில் எந்தவொரு தவறும் நடக்காமல் எங்களது நல்லாட்சி தொடரும்; அடுத்த 20 ஆண்டுகளுக்கும் எங்களது தலைவர் தளபதி விஜய் தான் முதலமைச்சராக இருப்பார்" என்று தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தனியார் பள்ளி விழா ஒன்றில் தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் "நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எனது தொகுதியில் நான் வெறும் 4 நாட்கள் மட்டுமே நேரில் சென்று வாக்கு சேகரித்தேன். ஆனால், இன்று நான் ஒரு அமைச்சராக உங்கள் முன்னால் நிற்கிறேன். மக்கள் எனக்காகவோ, எனது சொந்தப் பின்னணிக்காகவோ ஓட்டுப் போடவில்லை; எல்லாம் எங்களது தலைவர் தளபதி விஜய்க்காகத் தான் வாக்களித்துள்ளனர்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அமைந்துள்ள எங்களது தவெக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான அனைத்து நற்பணிகளும் எவ்விதத் தவறும், சலசலப்பும் இன்றி வெளிப்படைத்ன்மையுடன் தொடர்ந்து கொண்டு சேர்க்கப்படும். தமிழக மக்களின் பேராதரவோடு அடுத்த 20 வருடங்களுக்கும் எங்களது தளபதி விஜய் தான் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என்று அவர் முழக்கமிட்டார்.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சூழலில், கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி மண்ணில் நின்று தமிழக அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.