"விஜய் உயிரோடு இருக்க மாட்டார்" - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்து மிரட்டல்!
அதிமுகவை அழிக்கவோ அல்லது அபகரிக்கவோ முயற்சி செய்தால் அதிமுக தொண்டர்கள் தற்கொலைப்படையாக மாறுவார்கள் என்றும், அந்த சூழலில் விஜய் உயிரோடு இருப்பாரா எனத் தெரியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது பெரும் அரசியல்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சியில் முதல்வர் விஜயை பாராட்டி பேசும் அமைச்சர்கள் மற்றும் ஆதவ் அர்ஜுனா போன்றோர், விஜய் அமெரிக்க ஜனாதிபதியாகவோ அல்லது ஐநா சபை தலைவராகவோ கூட வருவார் எனப் புகழ்ந்து பேசட்டும்; அதைத் தடுக்க எந்த வாய்ப்பூட்டு சட்டமும் இல்லை என ஆர்.பி.உதயகுமார் கிண்டலடித்துள்ளார்.
"நான் தான் எம்.ஜி.ஆர், நான் தான் ஜெயலலிதா" எனக் கூறி அதிமுக தொண்டர்களை ஏமாற்றி, கட்சியை அபகரிக்க தவெக முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அதிமுகவை அழிக்க முயன்றால், உண்மையான அதிமுக தொண்டர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்; அல்லது அவ்வாறு அழிக்க நினைக்கும் விஜய் உள்ளிட்டோர் உயிரோடு இருப்பார்களா எனத் தெரியாது என எச்சரித்தார்.
அதிமுகவை அந்நியர்கள் ஆக்கிரமிக்க முயன்றால், குடும்பத்திற்கு ஒருவர் வீர திலகமிட்டுத் தற்கொலைப்படையாகப் புறப்பட்டு புரட்சி செய்வார்கள் என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8 இடங்களில் தவெகவும், 2 இடங்களில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுகவில் செல்வாக்கு இழந்த ஆர்.பி.உதயகுமார், தவெகவில் தனக்கு இடம் கிடைக்காது என்ற விரக்தியில்தான் தினமும் வீடியோ போட்டுப் புலம்பி வருவதாகத் தவெகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.