பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த  விஜய் ... தவெக தொண்டர்கள் உற்சாகம்!

 

 
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், விஜய் எங்கு வாக்களிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்தது.

இன்று காலை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது காரில் வந்திறங்கிய விஜய், அங்கிருந்த பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அவர் வருவதை முன்னரே அறிந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அந்தப் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ‘தளபதி’யைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜய், தனது மை இடப்பட்ட விரலைக் காட்டிப் புன்னகைத்தார். எவ்வித அரசியல் கருத்துகளையும் தெரிவிக்காமல், அமைதியாகத் தனது காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகையை முன்னிட்டு நீலாங்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.