எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் விஜய்... முதல் முயற்சியிலேயே சரித்திரம் படைத்த சாதனை நாயகன்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய அரசியலின் ஜம்பவான்களான எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் சாதனைகளுடன் ஒப்பிடப்படுகிறது. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியல் கட்சி தொடங்கிய மிகக்குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலை நெருங்கியுள்ள விஜய்யின் இந்த எழுச்சி, தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது. 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, முதல் தேர்தலிலேயே முதலிடம் பிடித்து அவர் முத்திரை பதித்துள்ளார்.
இந்தியாவிலேயே ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து முதல்வரான சாதனையை முதலில் படைத்தவர் எம்.ஜி.ஆர். 1972-ல் அதிமுகவைத் தொடங்கிய அவர், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். அவரைத் தொடர்ந்து ஆந்திராவில் என்.டி.ஆர், கட்சி தொடங்கிய வெறும் 9 மாதங்களிலேயே மாபெரும் வெற்றி பெற்று முதல்வரானார். தற்போது இவர்களின் வரிசையில், தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு சினிமா நட்சத்திரம் இவ்வளவு குறுகிய காலத்தில் மாநில அளவில் மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தியது இதுவே முதல்முறையாகும்.
விஜய்யின் இந்த மின்னல் வேக எழுச்சி, என்.டி.ஆர் ஆந்திராவில் நிகழ்த்திய அரசியல் புரட்சிக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் நிலவி வந்த பாரம்பரிய அரசியல் கணக்குகளைத் தவிடு பொடியாக்கி, இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவுடன் தவெக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆரைப் போல விஜய்யும் தனது முதல் அரசியல் பிரவேசத்திலேயே ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துத் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக மாறியுள்ளார்.