விஜய் வீட்டிலிருந்து  வெளியே வந்த ’த்ரிஷா’...  ‘தம்ப்ஸ் அப்’ காட்டி வெற்றியைக் கொண்டாடிய நடிகை!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தவெக, 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு நடிகை திரிஷா நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நீண்ட நேரப் சந்திப்பிற்குப் பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்த திரிஷா, அங்குத் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவர் வெற்றியின் அடையாளமாக ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs Up) சைகையைக் காட்டிவிட்டுச் சென்றார்.

திரிஷாவின் இந்தச் சைகை தவெக-வின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அமைந்ததுடன், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விஜய்யும் திரிஷாவும் திரையில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்த நிலையில், தற்போது அரசியலிலும் விஜய்யின் வெற்றிக்குத் திரிஷா நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் இந்த அரசியல் எழுச்சி திரையுலகினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.