திமுக கூட்டணியில் நீடிப்பு... விஜய்க்கு ஆதரவு இல்லை எனப் பிரேமலதா அதிரடி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், தேமுதிக-வின் ஆதரவு விஜய்க்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவியது.
இது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் உறுதியாக உள்ளோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் மூலம், திமுக கூட்டணியைத் தாண்டி தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தேமுதிக-விற்கு இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தங்களது அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டசபை உருவாகியுள்ள நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வின் ஆதரவும் ஆட்சி அமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்துப் பரிசீலித்து வரும் வேளையில், தேமுதிக எடுத்துள்ள இந்த முடிவு விஜய்க்குச் சற்றுப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.