விஜய் இல்லத்திற்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்... !

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்திக்க, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வருகை தந்தனர். 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரவை பங்கீடு மற்றும் ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, காங்கிரசுக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கீடு செய்வது மற்றும் பொதுவான குறைந்தபட்சத் திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் மூலம் தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த வருகையைத் தொடர்ந்து, தவெக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டுள்ளனர். இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு வெற்றிகரமான கூட்டணி ஆட்சியின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு கூட்டணி அரசு அமையப் போவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.