விஜய் வீட்டின் முன் பரபரப்பு: விதிகளை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீஸ் அபராதம்!
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு முன்னால், போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குக் காவல்துறை அதிரடியாக அபராதம் விதித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யைச் சந்திக்கப் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பனையூர் மற்றும் நீலாங்கரை அலுவலகங்களுக்குத் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் வழக்கத்தை விடக் கூடுதல் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாகச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகத் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களைச் சென்னை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறி 'நோ பார்க்கிங்' பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களின் வருகையால் நீலாங்கரை மற்றும் பனையூர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் வாகனங்களை முறையாக நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றித் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.