தமிழகத்தின் புதிய நாயகன்... இன்று முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்... நேரு விளையாட்டு அரங்கில் கோலாகல விழா!

 

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று மலருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று காலை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 121 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.

நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்யின் கோரிக்கையை ஏற்று, ஆளுநர் அவருக்குப் பதவியேற்க அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை 10:00 மணியளவில் நடைபெறும் விழாவில், விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். விஜய்யுடன் சேர்ந்து புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உட்பட 10 முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது ‘தளபதி’ முதல்வராகப் பதவியேற்பதைக் காணச் சென்னையில் குவிந்துள்ளனர். வரும் 13-ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆளுநரின் நிபந்தனையை ஏற்று, புதிய அரசு தனது மக்கள் பணியை இன்று முதல் தொடங்குகிறது.