ஒடிசா கடற்கரையில் தளபதி...  முதல்வராகப் பதவியேற்கும் விஜய்க்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து!

 

 


தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒட்டுமொத்த தேசமே உற்று நோக்கி வருகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக, ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி கடற்கரையில் விஜய்யின் உருவம் மணல் சிற்பமாக மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் இந்த பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த மணல் சிற்பத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் விஜய்யின் முகத் தோற்றம் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் சுதர்சன் பட்நாயக் அதில் பதிவு செய்துள்ளார். திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் ஒரு தலைவருக்கு, மற்றுமொரு மாநிலத்திலிருந்து கிடைத்துள்ள இந்த கௌரவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்தச் சிற்பத்தின் முன் நின்று ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்துத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் வெற்றிக்கு, மாநில எல்லைகளைக் கடந்து கிடைத்து வரும் இத்தகைய வரவேற்பு தவெக தொண்டர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளதது. இன்று காலை 10:00 மணியளவில் சென்னையில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, ஒடிசா கடற்கரையில் உருவான இந்த மணல் ஓவியம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விஜய்யின் புதிய அரசியல் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் எனப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலை ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.