தமிழக அரசியல் வரலாற்றில் மைல் கல்... கோட்-சூட் உடையில் சட்டமன்றத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்!  

 

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், இன்று 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலும் தனது தனித்துவமான கோட்-சூட் உடையில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட போது, அவருக்கு அடுத்த இடத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி என். ஆனந்த் அமர்ந்திருந்தார். ஆளுங்கட்சிக்கு நேர் எதிர் திசையில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களுடன் அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் உள்ள 9 அமைச்சர்களும், பின்னர் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் வரிசையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நேற்று முதலமைச்சராகப் பதவியேற்ற போது ‘ஆண்டவன் மீது ஆணையாக’ என்று கூறிப் பொறுப்பேற்ற விஜய், இன்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் போது ‘உளமார உறுதி கூறுகிறேன்’ என்று கூறி தனது உறுதிமொழியை மொழிந்தார். இந்தத் திடீர் மாற்றமும், அவரது தெளிவான பேச்சும் அவையில் இருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு, உறுப்பினர் பதிவேட்டில் முதலமைச்சர் விஜய் முறைப்படி கையெழுத்திட்டார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர். திரையுலகிலிருந்து அரசியல் களத்திற்கு வந்து, இன்று சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராகவும் உறுப்பினராகவும் விஜய் நுழைந்துள்ள இந்தத் தருணம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.