புதிய கோப்புகளில் கையெழுத்திடத் தடை... அமைச்சர்களுக்கு விஜய் உத்தரவு!

 

 

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் மின்சாரத் துறை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் அண்மையில் வெளியிடப்பட்டு, கடந்த ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதில் புதிய அரசு உறுதியாக உள்ளது.

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள கே.ஏ.செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் ஆட்சி நிர்வாகத்திற்குப் புதியவர்கள் என்பதால், எவ்விதத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. தற்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக உள்ளதால், அமைச்சர்களின் செயல்பாடுகளில் ஏதேனும் சிறு தவறு நடந்தாலும் அதனைப் பெரிய அளவில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் தங்களது பக்கம் அமைச்சர்களை ஈர்க்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்கு முக்கியக் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளார். அதன்படி அடுத்த 6 மாதங்களுக்கு தினசரிச் செலவுகள் மற்றும் வழக்கமான கோப்புகளைத் தவிர, வேறு எந்தவொரு புதிய கோப்புகளிலும் அமைச்சர்கள் யாரும் கையெழுத்திடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் புதிய அரசிடம் ஒப்பந்தங்களைப் பெற முயல்வதைத் தடுத்து, நிர்வாகத் தூய்மையைப் பேணும் நோக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.