அமைச்சர் மீதான போதைப்பொருள் புகார்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள த.வெ.க. அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இணையதளங்களில் காணொளி ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் புதிய அரசின் நிர்வாக நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், இதன் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக ஆராய உளவுத்துறை விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரின் இந்தச் செயல்பாடு குறித்து உளவுப்பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய இந்தக் காணொளி குறித்து அமைச்சர் சரத்குமார் தரப்பில் ஏற்கனவே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது தனது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அதற்காக மாத்திரையைப் பொடி செய்து கொடுத்த போது எடுக்கப்பட்ட பதிவே தவறாகப் பரப்பப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் தற்போதும் பெரும் பேசுபொருளாகவே நீடித்து வருகிறது.
அமைச்சரின் இந்த விளக்கத்தைத் தாண்டி, முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் அவரிடம் தனியாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உளவுத்துறை நடத்தும் இந்த முதற்கட்ட விசாரணையின் அறிக்கை இன்னும் சில தினங்களில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் மீதான குற்றம் ஏதேனும் ஒரு வகையில் உறுதியானால், அவர் உடனடியாகத் தனது அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் த.வெ.க. உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.