இன்று விஜய் ‘பாபா’ தரிசனம்... திருச்செந்தூரைத் தொடர்ந்து ஷீரடி பயணம்!

 

இன்று மாலை தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ள நிலையில், முழு நம்பிக்கையில் ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு வருகிறார் விஜய்.

நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்ட விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அவரது இந்த திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திருச்செந்தூர் தரிசனத்தை முடித்துக் கொண்ட விஜய் அடுத்ததாக இன்று ஏப்ரல் 29 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடிக்கு செல்கிறார்.

ஷீரடியில் சாய் பாபா கோவிலில் அவர் சிறப்பு தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை விமானம் மூலம் விஜய் ஷூரடி புறப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அவர் அமைதியான முறையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வாக இந்த பயணங்களை அவர் மேற்கொண்டு வருவதாக அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அவர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஷீரடி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அடுத்தடுத்த ஆன்மீகப் பயணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.