விஜய் பிரச்சாரம் பாதியில் திடீர் ரத்து... முட்டுக்கட்டை போடுவதாக ஆனந்த் புகார்!

 

பெரம்பூரில் இன்று மதியம் அனல் பறக்கும் உரையுடன் தனது பிரசாரத்தைத் தொடங்கிய விஜய், அடுத்ததாக வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தப் பயணத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாலை 5 மணியளவில் தவெக அறிவித்துள்ளது.

பெரம்பூர் பிரசாரத்தின் போதே லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்லும் வழிகளை முறைப்படுத்தச் சென்னைப் பெருநகர காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என என். ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

"பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கலின் போது காவல்துறை நடந்து கொண்டது போலவே, மற்ற இடங்களிலும் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடப்படுகிறதா?" என்ற தொனியில் என். ஆனந்தின் அறிக்கை அமைந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, தவெக-விற்கு ஒரு நீதியா? என்ற கேள்வியைத் தொண்டர்கள் மத்தியில் இந்தப் பதிவு எழுப்பியுள்ளது.

இன்று மாலை வில்லிவாக்கத்தில் நடைபெறவிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களுக்கான பிரசாரப் பயணத் திட்டங்களில் மாற்றம் இருக்குமா என்பது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.