விஜய் கார் ஓட்டுநர் மகன் சபரிநாதன் தமிழக அரசின் கொறடாவாக நியமனம் - முதல்வர் விஜய்யின் நெகிழ்ச்சி முடிவு!

 

தமிழக அரசின் புதிய கொறடாவாகச் சபரிநாதன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வரும் ராஜேந்திரனின் மகன்தான் இந்தச் சபரிநாதன். நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள முக்கியமான சூழலில், தனது நம்பிக்கைக்குரிய ஒருவரை அரசு கொறடாவாக அறிவித்து முதலமைச்சர் விஜய் அதிரடி காட்டியுள்ளார்.

விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சபரிநாதன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றார். மொத்தம் 58,041 வாக்குகள் பெற்ற அவர், சுமார் 20,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். ஒரு சாதாரண ஓட்டுநரின் மகனுக்குச் சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்கியதோடு மட்டுமின்றி, தற்போது அரசு கொறடா என்கிற அதிகாரமிக்க பதவியையும் வழங்கி விஜய் அழகு பார்த்துள்ளார்.

தன்னுடன் நீண்ட காலம் பயணிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விஜய்யின் இந்தச் செயல், கட்சித் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உழைப்புக்கும் உண்மைக்கும் மதிப்பளிக்கும் ஒரு தலைவராக விஜய் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். விளிம்புநிலை மக்களும் உயரிய பதவிகளை அடைய முடியும் என்பதற்குச் சபரிநாதனின் இந்த நியமனம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விருகம்பாக்கம் தொகுதி மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.