இன்றைய விஜய்யின் சென்னை பிரசாரம் திடீர் ரத்து - பெரம்பூர் 'வழக்கு' எதிரொலியா? கொந்தளிக்கும் தொண்டர்கள்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய், இன்று சென்னையில் மேற்கொள்ளவிருந்த பிரசாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் பிரசாரம் செய்ய த.வெ.க தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல்துறை அனுமதி வழங்கினாலும், அதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளே ரத்து செய்யக் காரணமாக அமைந்துள்ளன.
வில்லிவாக்கத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும், தி.நகரில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை தரப்பில் வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை (1 மணி நேரம்) மற்றும் தி.நகரில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை எனத் தலா ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குள் லட்சக்கணக்கில் கூடும் ரசிகர்களையும் மக்களையும் கட்டுப்படுத்திப் பிரசாரம் செய்வது சாத்தியமில்லை என்பதால், இன்றைய பயணத்தைத் தற்காலிகமாக ரத்து செய்வதாகத் த.வெ.க தலைமை அறிவித்துள்ளது.
முன்னதாக பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்தபோது, மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே, இன்றைய பிரசாரத்திற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் காவல்துறை விதித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், விஜய்யின் பிரசாரம் கட்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், சென்னை முழுவதும் காத்திருந்த த.வெ.க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.