விஜய்யின் நெருங்கிய உறவினரான இன்னசென்ட் திவ்யா பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமனம்!

 

தமிழ்நாட்டில் பல்வேறு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இம்மாற்றங்களில் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்ற தகவல் தற்போது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இதற்கு முன்பு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், சேலைகளை மட்டுமே விற்க வேண்டும் என்றும் போர்வை, வீட்டுத் துணிகள் உள்ளிட்ட இதர துணிகளைக் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். மேலும், பெண் ஊழியர்களை வெளியே சென்று துணிகளை விற்கச் சொன்னது போன்ற கெடுபிடிகளும், 10 விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநராக அவர் மாற்றப்பட்ட செய்தி அந்தத் துறை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது அவர் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இன்னசென்ட் திவ்யா முதல்வர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதாலேயே இந்த முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பல தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேசமயம், இவர் ஒரு நேர்மையான அதிகாரி என்ற நற்பெயரைக் கொண்டுள்ளதால், பள்ளிக்கல்வித்துறையில் இவரது செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.