விஜய் சூறாவளிப் பிரச்சாரம்.. .ஒரே நாளில் 5 தொகுதிகள் - முழு பயண விவரம் இதோ!

 

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரையை வரும் மார்ச் 28-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஆகியோரைச் சந்தித்துப் பாதுகாப்பு மற்றும் பரப்புரை அனுமதி கோரி மனு அளித்துள்ளார். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 3,000 பேர் வரை பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ஒருநாள் பயணத் திட்டம் (மார்ச் 28): காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்படும் விஜய், கீழ்க்கண்ட அட்டவணைப்படி பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி: பெரம்பூர் (எம்.கே.பி நகர்), மதியம் 1 மணி: கொளத்தூர், மதியம் 2 மணி: வில்லிவாக்கம், மாலை 3 மணி: அண்ணா நகர், மாலை 4 மணி: விருகம்பாக்கம்.

விஜய் தனது முதல் நாள் பிரச்சாரத்திலேயே சென்னையின் முக்கியத் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளை அவர் குறிவைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுக்கிறது. முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பரப்புரை, தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.