விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம் - பெண் நீதிபதி எழிலரசி மாற்றம்... பின்னணி என்ன?

 

தமிழக அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ள தவெக தலைவர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினரின் விவாகரத்து மனு மீதான விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழிலரசி வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது நீதிபதி சுஜாதா இந்த வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வட்டாரங்களில் இது ஒரு வழக்கமான பணி இடமாற்றம் என்று கூறப்பட்டாலும், சில யூகங்களும் உலவி வருகின்றன: கடந்த விசாரணையின் போது விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, காணொளி காட்சி மூலம் ஆஜராக நீதிபதி எழிலரசி அனுமதி அளித்திருந்தார்.

மிக விரைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 முதல் இவர்கள் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படும் நிலையில், சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனக்கான குடியிருப்பு உரிமை மற்றும் ஜீவனாம்சம் குறித்துக் கோரப்பட்டிருந்தது. வரும் மே மாதம் நடைபெறவுள்ள அடுத்த கட்ட விசாரணையின் போது, புதிய நீதிபதி சுஜாதா முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.