விஜய் போடும் முதல் கையெழுத்து... அன்னையர் தினத்தில் அசத்தல்... இன்றே கையெழுத்தாகும் அந்த 2 திட்டங்கள்!
தமிழக முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு முறைப்படி பதவியேற்கிறார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கோட்டையில் எந்தத் திட்டத்திற்காகத் தனது முதல் கையெழுத்தைப் போடுவார் என்பதுதான் இப்போது தமிழக அரசியல் களத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பதவியேற்றவுடன் மக்கள் நலன் சார்ந்த 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில், விஜய்யும் அதே பாணியைப் பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக-வின் மாபெரும் வெற்றிக்குப் பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகித்ததால், அவர்களைக் கவரும் விதமான அறிவிப்புகளே விஜய்யின் முதல் கையெழுத்தாக இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அவர் முதலில் கையெழுத்திடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, ஏழைக் குடும்பப் பெண்களின் திருமணத்திற்காக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் திட்டமும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தனது முதல் கையெழுத்தின் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே விஜய்யின் நோக்கம் என அவரது கட்சி நிர்வாகிகள் மிகுந்த உறுதியுடன் கூறி வருகின்றனர்.
பதவியேற்பு விழா முடிந்த கையோடு தலைமைச் செயலகம் செல்லும் அவர், அங்குத் தயாராக இருக்கும் மக்கள் நலத் திட்டக் கோப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தின் புதிய விடியலாகப் பார்க்கப்படும் விஜய்யின் அந்த முதல் கையெழுத்து, பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.