undefined

"காளையை அடக்கிய சின்னப் பையன்" - மேடையில் திடீரென கண்கலங்கிய விஜய்!

 

வேலூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு குட்டி கதையின் மூலம் தற்போதைய அரசியல் சூழலை விமர்சித்ததோடு, தொண்டர்களிடையே உரையாற்றும்போது உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது அரசியல் பயணத்தில் வேலூர் கூட்டத்தை மிக முக்கியமானதாக மாற்றிய விஜய், அங்கிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஒரு சுவாரசியமான குட்டி கதையுடன் தனது உரையைத் தொடங்கினார்.

"நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு முரட்டுக் காளை சீறிக்கொண்டு நிற்கிறது. அனுபவம் வாய்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் அதைக் கையாள முடியாமல் அடிபட்டுத் திரும்புகிறார்கள். அப்போது ஒரு சின்னப் பையன் கெத்தாக உள்ளே நுழைகிறான். ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில், அந்தக் காளையின் கோபத்தை அதன் 'பசி'யாகப் புரிந்து கொண்டு, புல்லுக்கட்டு கொடுத்து அதைச் சாந்தப்படுத்துகிறான்" என்று விஜய் கதையை விவரித்தார். இந்தக் கதையில் வரும் 'முரட்டுக் காளை' தான் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் களம் என்றும், அதைச் சுலபமாக அடக்கித் தீர்வு காணும் அந்த 'சின்னப் பையன்' தான் நமது தமிழக வெற்றிக் கழகம் என்றும் கூறி அதிரடி காட்டினார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்களைச் சாடிய விஜய், "எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால், அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதற்குச் சமம். என்னை அசிங்கமாகப் பேசினால் அது மக்களை அசிங்கப்படுத்துவது போல" என ஆவேசமாகப் பேசினார். மேலும், வரும் தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளையான விஜய் தான் வேட்பாளர் என்றும், உங்கள் வாக்கு 'விசில்' சின்னத்திற்கே என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

தன் உரையின் உச்சகட்டமாக, மக்களுக்கும் தனக்கும் உள்ள பிணைப்பைப் பற்றிப் பேசும்போது விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். "விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி, உடலும் உயிரும் மாதிரி. ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. இது மிகவும் சென்சிட்டிவான செண்டிமெண்ட்" என்று அவர் கூறியபோதே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கண்கள் கலங்கினார். இதைப் பார்த்த அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உணர்ச்சிவயப்பட்டு முழக்கமிட்டனர். ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக நாம் களம் காண்போம் என அவர் விடுத்த அழைப்பு, தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.