எழும்பூரில் விஜய் மாஸ் ரோடு ஷோ - ‘விசில்’ சின்னத்தைக் காட்டி வாக்குச் சேகரிப்பு! 

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னை எழும்பூர் தொகுதியில் இன்று மாலை பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். தி.நகர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு எழும்பூர் தொகுதிக்கு வருகை தந்த விஜய்க்கு, தவெக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ராஜ்மோகனை ஆதரித்துத் திறந்த வாகனத்தில் நின்றபடி விஜய் வாக்குச் சேகரித்தார். வாகனத்தில் நின்றிருந்த விஜய், வாக்காளர்களைப் பார்த்துத் தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்தைக் கைகளால் சைகை செய்து காட்டி ஆதரவு கோரினார்.

 

சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் அன்பின் அடையாளமாக விஜய்க்குப் பல்வேறு பரிசுப் பொருட்களையும், பொன்னாடைகளையும் வழங்கினர். வாகனத்திற்கு அருகில் வந்த தொண்டர்கள் வழங்கிய மாலைகள் மற்றும் நினைவுப் பரிசுகளை விஜய் புன்னகையுடன் பெற்றுக் கொண்டார். எழும்பூர் ரயில் நிலையப் பகுதி மற்றும் தாளமுத்து நடராசன் மாளிகை சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

தி.நகரைப் போலவே எழும்பூரிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் புடைசூழப் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் விஜய்யின் ரோடு ஷோ நடைபெற்றது. எழும்பூர் தொகுதியில் தவெக-வின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இந்த ரோடு ஷோ அமைந்ததாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.