விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.520 கோடி... மனைவி பெயரில் கிலோ கணக்கில் தங்கம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கும் தனது மனைவி சங்கீதாவிற்கும் உள்ள சொத்து விபரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் பெயரில் மட்டும் சுமார் ரூ. 404 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் (வங்கிக் கணக்குகள், பங்குகள் மற்றும் வாகனங்கள்) உள்ளன.நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ. 115 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. விஜய்யின் பெயரில் 391 சவரன் தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் மனைவி சங்கீதா பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உள்ளன. சுமார் ரூ. 15 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. சங்கீதாவின் பெயரில் 3 கிலோ தங்கம் இருப்பதாகப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் ரூ. 25 கோடி, ஆக்ஸிஸ் வங்கியில் ரூ. 40 கோடி, எச்டிஎப்சி வங்கியில் ரூ. 20 கோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக விஜய்யின் சொத்து மதிப்பு குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்துள்ள இந்த அதிகாரப்பூர்வ விபரங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. திரையுலகில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி வரை ஊதியம் வாங்கும் விஜய், தற்போது முழுநேர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அவரது வெளிப்படையான இந்த அறிவிப்பு ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.