விஜய்க்கு அடுத்த சிக்கல்... பின்வாங்கும் காங்கிரஸ்?! - தவெக நிபந்தனையை மீறியதால் அதிருப்தி... ஆட்சியமைப்பதில் மீண்டும் சிக்கல்!
விஜய் ஆட்சியமைப்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. ஒரு பக்கம் இன்னமும் விசிக ஆதரவு தெரிவித்து கடிதம் தராத நிலையில், துணை முதல்வர், அமைச்சர், இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், டிடிவி தனது எம்.எல்.ஏ.வின் போலி கடிதத்தை விஜய் கொடுத்திருப்பதாக போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அடுத்த அதிர்ச்சியாக தற்போது காங்கிரஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திணறி வருகிறார். இந்நிலையில், தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் அதிருப்தி நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தவெக அரசுக்கு ஆதரவு தரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியையும் நாடக்கூடாது என்ற முக்கிய நிபந்தனையை இடதுசாரிகள் விதித்திருந்தனர்.
ஆனால், தவெக தரப்பு அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் ஆதரவைப் பெற முயற்சி செய்ததும், அவர் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்டதும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸை அதிருப்தியடையச் செய்துள்ளது. பாஜக-வின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அமமுக போன்ற கட்சிகளின் உதவியைத் தவெக நாடியது, தங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனையை மீறிய செயலாகவே அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே ஆதரவு கடிதம் கொடுத்த காங்கிரஸ் கட்சி, தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கத் தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்தத் திடீர் பின்வாங்கல் மற்றும் இடதுசாரிகளின் அதிருப்தி காரணமாக, இன்று நடைபெறவிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
118 என்ற மேஜிக் எண்ணைத் தொடத் துடிக்கும் தவெக-வுக்கு, கூட்டணிக் கட்சிகள் விதித்த நிபந்தனைகளே இப்போது பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளன. இந்த அரசியல் இழுபறியால் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமையுமா அல்லது ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா என்ற பதற்றம் மக்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.