விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... மீண்டும் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 500 பேர்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அரசியல் நகர்வு நிகழ்ந்துள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தவெக-விலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்தபோது, அவரது தீவிர ஆதரவாளர்களும் அவருடன் இணைந்து அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெக-வை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், தவெக-வில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி கடந்த சில வாரங்களாக நிலவி வந்தது.
தேர்தல் நேரத்தில் தங்களது உழைப்பு அங்கீகரிக்கப்படாததால், மீண்டும் அதிமுகவிலேயே இணைந்து பணியாற்றுவது என அவர்கள் முடிவெடுத்தனர். அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், இன்று முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் முன்னிலையில் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
அந்தியூர் பகுதியில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவிற்குத் திரும்பியிருப்பது, அந்தத் தொகுதியின் தேர்தல் கணக்குகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "தாய் கழகமான அதிமுகவிற்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது; இனி இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" எனத் திரும்பி வந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.