அண்ணாநகரில் தவெக அபார வெற்றி..., சென்னையில் முதல் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய விஜய் கட்சி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சென்னையின் முக்கியத் தொகுதியான அண்ணாநகரில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்தொகுதியில் களம் இறங்கிய தவெக வேட்பாளர் வி.கே.ராம்குமார், ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த நிலையில், தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி வெற்றி சென்னையின் அரசியல் களத்தில் தவெக-வின் பலத்தை நிரூபித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இறுதித் தரவுகளின்படி, வி.கே.ராம்குமார் மொத்தம் 69,457 வாக்குகளைப் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களை விடச் சுமார் 21,831 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இந்த வெற்றியை அவர் வசப்படுத்தியுள்ளார். சென்னையின் இதயப் பகுதியில் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் எல்லையற்ற உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் வெற்றிக் கணக்கை அண்ணாநகர் தொகுதியில் இருந்து தொடங்கியுள்ளது. ஒரு புதிய கட்சி, பாரம்பரியமிக்க கட்சிகளின் கோட்டையைத் தகர்த்து வெற்றி பெற்றுள்ளது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக் செய்தியைக் கேட்டவுடன் அண்ணாநகர் பகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் விசில்களை ஊதியும், இனிப்புகளை வழங்கியும் மிகத் தீவிரமாகக் கொண்டாடி வருகின்றனர்.