திருச்சியில் விஜய் ரோடு ஷோவில் தள்ளுமுள்ளு... தடுப்புகளை உடைத்த இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி!
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் உருவானது.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி, தனது சின்னத்தை நினைவூட்டும் வகையில் விசில் ஊதி அவர் வாக்கு சேகரித்தபோது, சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டனர்.
விஜய் சென்ற வாகனத்தைச் சூழ்ந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள், அவரை மிக அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காவல்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்புத் தடுப்புகளை முட்டித் தள்ளினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.
நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட போலீசார், கூட்டத்தைக் கலைக்கவும் நெரிசலைக் கட்டுப்படுத்தவும் லேசான தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் இளைஞர்கள் சிதறி ஓடினர். சிறிது நேரப் பரபரப்பிற்குப் பிறகு, போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய பின் விஜய்யின் ரோடு ஷோ தொடர்ந்து நடைபெற்றது.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், இன்று முழுவதும் திருச்சியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தேவாலயத்தில் அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்த நிலையில், தற்போது ரோடு ஷோவில் தடியடி வரை சென்றிருப்பது திருச்சி தேர்தல் களத்தை அதிர வைத்துள்ளது.