விஜய் ஸ்டைலில் பெற்றோர்... வெள்ளை - காக்கி உடையில் வந்து வாக்களித்த எஸ்.ஏ.சி - ஷோபா! தவெக தொண்டர்கள் உற்சாகம்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய்யின் தந்தை, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

வாக்களிக்க வந்த விஜய்யின் பெற்றோர் இருவரும் ஒருமித்த நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் வெள்ளை மற்றும் காக்கி கலந்த ஆடைகளை அணிந்திருந்தனர். இது தவெக தலைவர் விஜய் தனது பிரசாரங்களின் போது விரும்பி அணியும் 'சிக்னேச்சர்' உடையாகும்.

கடந்த காலங்களில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகப் பேசப்பட்ட நிலையில், இன்றைய இவர்களது உடை அலங்காரம், "நாங்கள் எங்கள் மகனுக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறோம்" என்பதை உலகிற்கு உரக்கச் சொல்வது போல் அமைந்திருந்தது.

விஜய்யின் பெற்றோரைப் பின்பற்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்களும் அதே போன்ற வெள்ளை மற்றும் காக்கி உடைகளை அணிந்து வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இது ஒரு மௌனமான ஆதரவுப் பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா சந்திரசேகர், மை வைத்த விரலைக் காண்பித்து விட்டு, பெரிய அளவில் பேட்டிகள் ஏதும் அளிக்காமல் அமைதியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.