விஸ்வரூபமெடுக்கும் விஜய்... தோழமைக் கட்சி கூட்டம் தொடங்கியது – புதிய கூட்டணிப் பெயர் சூட்ட வாய்ப்பு!
தமிழகத்தின் புதிய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் சென்னை கோவளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து நடக்கும் முதல் முக்கியக் கலந்தாலோசனைக் கூட்டம் இதுவாகும்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கோவளம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டத்தில், புதிய அரசியல் அச்சு ஒன்று முழுமையாக வடிவம் பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , காங்கிரஸ் மற்றும் சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-வுக்குத் தங்களது ஆதரவை அறிவித்த வைகோ தலைமையிலான மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தேர்தலுக்குப் பிந்தைய இந்த புதிய ஆளும் கூட்டணியை அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல் வரை பலமாக முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில், இந்த புதிய முன்னணிக்கு ஒரு பெயரிடவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், தவெக அரசுக்கான தங்களது ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து மட்டுமே தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளதால், இன்றைய தோழமைக் கட்சி கூட்டத்தைத் தவிர்த்துள்ளனர். இருப்பினும், இன்று காலை சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கள் சார்ந்த கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துத் தங்களது சுமுகமான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.