விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு... தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்துத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது காணாமல் போனார். அடுத்த நாள் (மார்ச் 11), வேடநத்தம் காட்டுப்பகுதியில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குற்றவாளியைக் கைது செய்யக் கோரி தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் தூத்துக்குடி - ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலையில் வேடநத்தம் கிராம மக்கள் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்புகாரில் ஆரம்பத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா, மார்ச் 12ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்: சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை மார்ச் 19ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்துப் போலீசார் கைது செய்தனர்.

மார்ச் 20ஆம் தேதி குளத்தூர் போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, குற்றச் சம்பவத்தை நடித்துக் காண்பிக்கச் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்தனர். இதன் பின்னரே, மாணவியின் உடல் 10 நாட்களுக்குப் பிறகு பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.

குளத்தூர் போலீசார் இந்த வழக்கில் மிக விரைவாகச் செயல்பட்டுத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற சாட்சிகள் மற்றும் இருதரப்பு விசாரணைகள் அனைத்தும் கடந்த மே 21ஆம் தேதியுடன் முறைப்படி நிறைவடைந்தன.

இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இறுதித் தீர்ப்பை வழங்கினார். மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காகத் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தர பிறப்பித்தார். குற்ற நிகழ்ந்த சில மாதங்களிலேயே போலீசாரின் துரித நடவடிக்கையால் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.