தந்தையின் இறுதிச்சடங்கிற்கு பணமின்றி தவித்த மாணவன் - கிராம மக்கள் பணம் திரட்டி உதவி - கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தாய், தந்தையரை இழந்து ஆதரவற்றுத் தவித்த 15 வயதுப் பள்ளி மாணவனின் தந்தைக்குக் கிராம மக்கள் இணைந்து இறுதிச்சடங்குகளைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (48). இவரது மனைவி முனியம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மனைவி மறைந்த பிறகும் வேறு திருமணம் செய்துகொள்ளாமல், தனது ஒரே மகனான மோகன்ராஜை (15) நடராஜன் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடராஜனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 11-ம் வகுப்பு பயிலும் மோகன்ராஜ், பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்குக் கூடப் பணமின்றித் தவித்த சிறுவனின் பரிதாப நிலையைக் கண்ட எஸ்.குளத்தூர் கிராம மக்கள், தங்களுக்குள் பணம் திரட்டி நடராஜனின் இறுதிச் சடங்குகளை முறைப்படி நடத்தி உடலை அடக்கம் செய்தனர்.

"எனக்கு உறவினர்கள் யாரும் ஆதரவாக இல்லை. உணவு, கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே தினசரி சிரமப்பட்டு வருகிறேன்" எனக் கூறி மாணவன் மோகன்ராஜ் கண்ணீருடன் உதவி கோரியுள்ளான். பெற்றோரை இழந்து தவிக்கும் இம்மாணவன் தொடர்ந்து கல்வி பயிலவும், அவனது எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் தமிழக அரசும், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும் காப்பக வசதி, மாதாந்திர உதவித்தொகை மற்றும் உயர் கல்விக்கான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.