நெகிழ்ச்சி... நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி... மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி கிராம மக்கள் அசத்தல்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய காடம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாகக் கல்விப் பணியாற்றி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை மிக விமரிசையாகக் கொண்டாட கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும் கிராம மக்கள் இந்த விழாவைத் திட்டமிட்டனர்.
கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டுக்களில் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், மின்விசிறிகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்களைக் கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பாரம்பரிய மேளதாளங்கள் மற்றும் தாரைத் தப்பட்டை முழங்க, உற்சாகமான கிராமிய ஆட்டத்துடன் இந்தச் சீர்வரிசைப் பொருட்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து பள்ளியின் நூற்றாண்டு விழாவை ஒரு குடும்பத் திருவிழாபோலக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரசுப் பள்ளி மீதும், அங்கு கல்வி கற்கும் குழந்தைகள் மீதும் கிராம மக்கள் வைத்துள்ள அளவற்ற பற்றை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நூற்றாண்டு கண்ட பள்ளியையும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் கிராமமே திரண்டு நடத்திய இந்த விழா அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வரும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.