காதலை விட மாட்டேன்... கூறிய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை... பரபரப்பு வாக்குமூலம்! 

 

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த சிவசாஸ்திரி (40) என்பவரின் 14 வயது மகள் விகாசினி, வானூர் அருகே கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொடர்பை அறிந்த பெற்றோர், மாணவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளனர். இருப்பினும் அந்த இளைஞருடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் 29-ம் தேதி இரவு, வீட்டில் இருந்தபோது இதுதொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவசாஸ்திரி மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர் வானூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.