விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டு வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது!
விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்வது போன்ற காட்சிகளைப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலைப் பகுதியைச் சேர்ந்த பிரபு (20), வழுதரெட்டியைச் சேர்ந்த மாதவன் (19) ஆகிய இருவரும், வழுதரெட்டி சுடுகாடு பகுதியில் நாட்டு வெடியை வெடிக்கச் செய்து, பாடல் பாடியபடி செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தக் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இருவரையும் கைது செய்த போலீசார்
இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பிரபு, மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.