விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 6 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி!
தெலங்கானா மாநிலம் படஞ்சேரு மண்டலத்தில் உள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள், அங்கு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள குளத்தில் கரைப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது குளத்தில் செங்கல் சூளைகளுக்காக மண் எடுக்கப்பட்டு ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாமல் மாணவர்கள் நீரில் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக 6 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் சென்றிருந்த 2 சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக ஆசிரம ஊழியர்களிடம் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்ற மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.