தினமும் சொல்லுங்க... காரிய தடைகளைத் தகர்த்து வெற்றிகளை குவிக்கும் விநாயகர் மந்திரம்... !
இந்து சமயத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் பெருமான் ஆவார். எந்தவொரு புதிய காரியத்தைத் தொடங்கும் முன்பும், தடைகள் ஏதுமின்றி அது வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடுவது நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இறை வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மந்திரங்கள், இறைவனின் வடிவமாகவே கருதப்படுவதோடு தனித்துவமான நன்மைகளையும் அள்ளித் தரக்கூடியவை ஆகும்.
வாழ்வில் தொடர் தடைகளைச் சந்திப்பவர்கள் தினமும் "ஓம் வக்ரதுண்ட மஹாகாயே, சூரிய கோடி சமப்பிரப, நிர்விக்னம் குருமே தேவ, சர்வ கார்யேசு சர்வதா" என்ற கணேச மந்திரத்தை உச்சரிப்பது நலம் தரும். வளைந்த துதிக்கையும் பெரிய உடலும் கொண்ட, கோடி சூரிய பிரகாசம் உடைய விநாயகப் பெருமானே, என்னுடைய எல்லா செயல்களையும் தடையின்றி வெற்றி பெறச் செய் என்பதே இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை அதிகாலையில் 108 முறை தொடர்ந்து பாராயணம் செய்து வர வாழ்வில் வெற்றிகள் குவியத் தொடங்கும்.
இதனுடன் சேர்த்து "ஓம் தத் புருஷாய வித்மஹே, வக்ர துண்டாய தீமஹி, தந்நோ தந்தி ப்ரசோதயாத்" என்ற கணேச காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம். சுருண்ட தும்பிக்கையும் தந்தமும் உடைய அந்த பரம புருஷன் நமது அறிவையும் செயலையும் தூண்டி, நல்வழி நடத்தி வெற்றி பெறச் செய்வார் என்பது இதன் நற்பொருளாகும். தினமும் விநாயகரைத் துதித்து இந்த மந்திரங்களை மனமுருகி அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள அனைத்து காரிய தடைகளும் விலகி ஓடும்.