பெங்களூரில் கொடூரம்.. வரதட்சணையை தர எதிர்த்த மகளை கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்திய தந்தை!
பெங்களூரில் வரதட்சணை கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியை மகளை, அவரது தந்தையே கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்திய திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியை துர்கா என்பவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அப்போது, அவரது தந்தை நாகேந்திரா, வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை தருமாறு கேட்டுள்ளார். வரதட்சணை கேட்பதற்கு மகள் துர்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தந்தையின் இச்செயலைக் கண்டித்து குடும்பத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். வரதட்சணையை எதிர்த்ததால் ஆத்திரமடைந்த தந்தை நாகேந்திரா, மகள் பணியாற்றும் கல்லூரி வளாகத்திற்குள் நேரடியாகப் புகுந்து, துர்காவைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த துர்காவை மீட்ட சக பேராசிரியர்களும் ஊழியர்களும், உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்துத் வழக்குப் பதிவு செய்த பெங்களூர் காவல்துறையினர், கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தை நாகேந்திராவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.