செஞ்சியில் அடுத்தடுத்து கொடூரம்.. 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 2 வயதுப் பிஞ்சுச் சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், அதனைத் தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் அதிர்வலைளையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளான். சிறுமியின் உடலமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இது குறித்து உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட 14 வயது சிறுவனின் குடும்பத்தினரிடம் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவனின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி மற்றும் அவரது பெற்றோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துப் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட அவனது குடும்பத்தினர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வடு மாறுவதற்குள், தற்போது 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.