தமிழகத்தில் அடுத்தடுத்து கொடூரம்... வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது!

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே  வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூத்துக்குடியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திரேஷ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 44). இவர் மீன்பிடி தொழிலாளி ஆவார். தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், குளச்சல் பகுதியில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில் வேலை பார்த்து வந்தார்.

விசைப்படகு உரிமையாளருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக அலெக்ஸ் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று, விசைப்படகு உரிமையாளரின் 11 வயது மகள் (6-ஆம் வகுப்பு மாணவி) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸ், அந்தச் சிறுமிக்குக் கடுமையான பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அலெக்ஸின் அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போடவே, அவர் அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக அழுதபடியே பக்கத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்குள்ள தனது உறவுக்காரப் பெண்ணிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். அந்தப் பெண் உடனடியாகச் சிறுமியின் தாயாருக்குத் தகவல் அளித்தார்.

தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், அலெக்ஸ் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.