திருவள்ளூரில் கொடூரம்.. பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை - ரூ.77,000 அபராதம்!
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ஒருவருக்குத் திருவள்ளூர் நீதிமன்றம் 'இரட்டை ஆயுள் தண்டனை' விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான இக்கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்ற தந்தையே, தனது 11 வயதுடைய பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களை விரிவாக ஆராய்ந்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட தந்தையின் மீதான குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்:
பெற்ற மகளைச் சீரழித்த குற்றத்திற்காக அந்தப் பாவித் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்குச் ரூ.77,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைச் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நல்வாழ்வு மற்றும் கல்விச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தரப்பிலிருந்து ரூ.5 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளியான தந்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.