undefined

பள்ளி வளாகத்திலேயே கொடூரம்... 2 வருடங்களாக மாணவி பலாத்காரம் - 4 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் வெறித்தனம்!

 

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கில வழிப் பள்ளியில், 12 வயது மாணவி ஒருவரைப் பள்ளி ஆசிரியர்களே பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவியை, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சில ஆசிரியர்களும் பள்ளி ஊழியர் ஒருவரும் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்தத் தகவலை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என அவர்கள் அந்தச் சிறுமியை மிரட்டி வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதலே அந்த மாணவி பள்ளிக்குச் செல்ல அடம் பிடித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாணவியின் தாய் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடூரங்களை அழுதுகொண்டே அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கேந்திரபாரா மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் சந்தன் குமார் புருஸ்டி (37), பிஸ்வா ரஞ்சன் சாஹூ (31), ரஷ்மிகாந்த பிஸ்வால் (47) மற்றும் உதவி செய்த பெண் ஆசிரியை மினதி பாய் (34) மற்றும் பள்ளி அலுவலக உதவியாளர் ரஷ்மி ரஞ்சன் ராணா (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ஆத்திரமடைந்த பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஒடிசா அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.