நாளை திருப்பதியில் விஐபி, ஸ்ரீவாணி தரிசனங்கள் ரத்து; பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது!

 

தொடர் விடுமுறை காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமானிய பக்தர்களின் கூட்டம் வரலாறு காணாத வகையில் அலைமோதுகிறது. இதன் காரணமாக, நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் கடுமையான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பல மணிநேரம் தர்ம தரிசன வரிசையில் காத்திருக்கும் சாதாரண பக்தர்களுக்கு விரைவாகத் தரிசனம் வழங்கவும் தேவஸ்தான நிர்வாகம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. நாளை ஜூன் 29-ஆம் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி ஆகிய சிறப்புத் தரிசனங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ரத்து நடவடிக்கை காரணமாக, வி.ஐ.பி பிரேக் தரிசனத்திற்கான பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் எதுவும் இன்று  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேவஸ்தானம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரவிருக்கும் பக்தர்கள் தற்போதைய கூட்ட நெரிசல் மற்றும் தரிசன ரத்து விபரங்களை உணர்ந்து, தங்களது திருமலை யாத்திரையை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தரிசன நேரத்தைக் குறைத்து, சாமானிய பக்தர்களின் வசதியை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக நடவடிக்கைக்கு வி.ஐ.பி மற்றும் சிறப்புத் தரிசனப் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.