எரிமலைக் குழம்பு என நினைத்து பதறிய மக்கள்… வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி!
இருண்ட குகைக்குள் ஆரஞ்சு நிறத்தில் நெருப்பு ஆறு பாய்வது போன்ற காட்சி… அதன் அருகிலேயே ஒருவர் சர்வசாதாரணமாகச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பவர்களைப் பதற வைக்கும் இந்தக் காட்சியின் பின்னணியில் இருப்பது உண்மையான எரிமலைக் குழம்பு அல்ல என்பது தெரியவந்துள்ளது.
வீடியோவில் ஒருவர் இருண்ட குகைக்குள் தவழ்ந்து செல்கிறார். அவருக்குப் பின்னால் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் ஏதோ ஒன்று பாய்வதுடன், நீராவி எழுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதனால், அவர் கொதிக்கும் லாவா நிரம்பிய குகைக்குள் செல்வதாகப் பலரும் நினைத்தனர்.
ஆனால், இந்தக் காட்சி வெனிசுலா நாட்டின் கனைமா தேசியப் பூங்காவில் உள்ள புகழ்பெற்ற 'ஃபயர் வாட்டர்ஃபால்' நீர்வீழ்ச்சியுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.
சூரியன் மறையும் நேரத்தில் அதன் கதிர்கள் நீர்வீழ்ச்சியின் மீது படும்போது, தண்ணீர் ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்கிறது. இதனால் அது உருகிய எரிமலைக் குழம்பு போலக் காட்சியளிக்கிறது. உண்மையில் இது ஒளியால் ஏற்படும் தோற்ற மயக்கமே.இன்ஸ்டாகிராமில் @pubity பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இயற்கையின் வியப்பூட்டும் காட்சியாக இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.