வைரல் வீடியோ... நடிகையின் கன்னத்தை கிள்ளி அத்துமீறிய ரசிகர்!

 

கன்னட மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ரச்சிதா ராமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ரச்சிதாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவர் அவரது கன்னத்தைத் தொட்டு கிள்ளிய அத்துமீறல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

allowfullscreen

நடிகை ரச்சிதா ராமின் 34-வது பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூருவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து விமரிசையாகக் கொண்டாடினர். நள்ளிரவில் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்திப்பதற்காக நடிகை ரச்சிதா நேரில் சென்றார். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே அவர்களுடன் உற்சாகமாகச் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென அருகில் நின்ற ரசிகர் ஒருவர் எல்லை மீறி ரச்சிதாவின் கன்னத்தை கிள்ளியுள்ளார்.

இந்த எதிர்பாராத செயலால் ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் சில கணங்கள் உறைந்துபோன ரச்சிதா, பின்னர் சுதாரித்துக் கொண்டு புன்னகையுடன் அதனைச் சமாளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பிரபலங்கள் பொதுவெளியில் ரசிகர்களைச் சந்திக்கும் போது இதுபோன்ற பாதுகாப்பற்ற சம்பவங்கள் நிகழ்வது திரையுலகில் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ரச்சிதா ராம் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.